awisosplschool

awisosplschool

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கலக்கிய தேர்தல் கமிஷன்... கலங்கிய கட்சிகள்...!

தமிழக சட்டசபை தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு பண பட்டுவாடா, விதிமீறல்கள் நடந்துள்ள நிலையில், கலவரமில்லாத ஓட்டுப்பதிவை நடத்திய தேர்தல் கமிஷனின் செயல்பாட்டில் வெற்றி பெறப்போவது பணமா? மக்கள் மனமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களும் பெரிதும் எதிர்பார்த்த சட்டசபை தேர்தல் கடந்த 13ம் தேதி மிக அமைதியாக நடந்து முடிந்தது. இந்திய வரலாற்றில் அதிக அளவு பண பட்டுவாடாவை மையமாக கொண்டு இந்த தேர்தல் நடந்தது. தேர்தல் கமிஷன் பறந்து பறந்து வந்தாலும், அவர்களை ஒரு பக்கம், "டைவர்ட்' செய்துவிட்டு, மற்றொரு புறத்தில் கட்சியினர் சாவகாசமாக பட்டுவாடா செய்தனர். தேர்தல் கமிஷனின் பறக்கும்படை நடத்திய பாரபட்சமில்லாத ரெய்டில் மட்டும் 45 கோடி ரூபாய்க்கும் மேல் சிக்கியது. இதற்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை என்பது தான் ஆச்சரியம். பட்டுவாடா மட்டுமின்றி, கள்ள ஓட்டுக்கும் பல வழிகளில் கடிவாளம் போட்டது தேர்தல் கமிஷன்.


பல முறை திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில், சரியான முகவரி தராத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. ஆனால், ஊழியர்களின் அலட்சியத்தால் சில உண்மையான வாக்காளர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. அடையாள அட்டை குளறுபடிக்கு மாற்றாக தேர்தல் கமிஷனே பூத் சிலிப்களை கொடுத்து, பிரச்னையை தீர்த்தது. தேர்தல் பணியில் ஈடுபட்டோருக்கு கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தேர்தல் கமிஷனில் உத்தரவை மதிக்காத பெரிய அதிகாரிகளையும் பாரபட்சமின்றி பணி மாற்றம் செய்தது தான் தேர்தல் கமிஷனின் உத்தரவை அனைவரும் அமல்படுத்த முழு காரணமானது.

தேர்தல் கமிஷனின் அதிரடியால் தமிழக போலீஸ் டி.ஜி.பி.,யாக இருந்த லத்திகா சரண் மே 13 வரை விடுப்பு எடுத்து சென்றார். இதேபோல் மேற்கு வங்க தேர்தல் பணிக்கு மாற்றப்பட்ட தமிழக உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட்டும் விடுமுறை எடுத்து ஒதுங்கிக் கொண்டார். இந்த அதிரடிகளை எதிர்பார்க்காத இடைமட்ட ஊழியர்கள் தேர்தல் கமிஷனுக்கு தேவையான ஒத்துழைப்பை கொடுத்தனர். அய்யகோ... என தலைவர்கள் எல்லாம் பதறினாலும், அரசியல்வாதிகளின் பதிலுக்குப் பதில் அறிக்கையை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளால் அதிர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்குகளையும், சளைக்காமல் தேர்தல் கமிஷன் எதிர் கொண்டது. பேனர் வைக்க தடை விதித்ததில் துவங்கி, போலீஸ் அதிகாரிகள் மாற்றம், தேர்தல் அதிகாரிகள் நியமனம் என இறுதியில் துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வன்முறையில்லா தேர்தலை கமிஷன் முடித்து விட்டது. ஆளுங்கட்சியினர் பணம் கொடுப்பதாக புகார்கள் வந்தன. எதிர்க்கட்சி கூட்டணியினர் பண பட்டுவாடா செய்வோரை பிடிப்பதில் அக்கறை காட்டினர். எதிர்க்கட்சி அணியிலும் பண பட்டுவாடா நடந்ததாக புகார்கள் வந்தன. இரு கூட்டணியினரும் தேர்தல் விதி மீறலில் ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை. இரு அணியினர் மீதும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன.

இப்படி கட்டுக்கடங்காத பணமும், விதிமீறல் நடந்தாலும், ஓட்டுப்பதிவு நாளில் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்து தேர்தல் நடத்தப்பட்டது. காலை 8 மணி துவங்கி மாலை 7 மணி வரை வாக்காளர்கள் காத்திருந்து ஓட்டுப்பதிவு செய்ததால், அரசியல்வாதிகள், போலீஸ், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்புமே முடிவை பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளனர். மே 13ல் வரவிருக்கும் தேர்தல் முடிவில் தான் வெற்றி பெற்றிருப்பது பணமா? மக்களின் மனமா? என தெரியும். ஆனாலும் கடந்த மார்ச் 1ல் களமிறங்கிய தேர்தல் கமிஷன் தான் முதல் வெற்றியை படைத்து தமிழக மக்களுக்கு நம்பிக்கையை, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக