awisosplschool

awisosplschool

புதன், 20 ஏப்ரல், 2011

பணம்காய்க்கும்மரம்-ATM ஒருபார்வை?

பொருளாதாரம் தேயும் சமயங்களில் விரக்தியில் அனேகம் பேர் சொல்லும் வசனம், ' பணம் என்ன மரத்துலயா காய்க்குது'. இதை எப்படியோ உளவுபார்க்கும் செயற்கைக்கோள்கள் மூலம் ஒட்டுக்கேட்ட வெள்ளைகாரன் கண்டுபிடிச்சது தான் ATM (Automatic Teller/Banking Machine) என்கிற தானியங்கி இயந்திரம். உண்மையில் இதைக் கண்டுபிடிப்பதற்கு தூண்டுகோலாக இருந்து நெம்பி விட்டது காசு போட்டால் மிட்டாய் கொடுக்கும் இயந்திரங்கள். ATM என்றால் தூரத்தில் நின்று என்னவோ, ஏதோ என்று பார்த்து விட்டு நம்பிக்கையில்லாமல் நகர்ந்து சென்ற காலங்கள் மலையேறி, இன்று உபயோகிக்காதவர்கள் மிக மிகக் குறைவெனும் விதத்தில் மக்களின் நம்பிக்கையை காலத்தால் வென்ற சாதனை நாயகன்.



என்ன தான் இருந்தாலும் இதன் வெற்றியில், வாடிக்கையாளர்களைப் பல மணி நேரம் வரிசையில் நிற்க விட்டு வெறியேற்றி அனுப்பும் வங்கிகள் முக்கியப் பங்காற்றி, புதிய தொழில்நுட்பங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையை செவ்வனே செய்து முடித்ததை நாம் மறுக்க முடியாது :). நேரே ATM சென்று அட்டையை உள்ளிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் அவசர யுகத்தில் அது எப்படி செயல்படுகிறது, எவ்வளவு தூரம் பாதுகாப்பானது, அதன் தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தான அறிமுகமே இப்பதிவு.



முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ATM என்பது ஒரு வெற்றுக் கணினி மட்டுமே (dumb system). உங்கள் அட்டையினை உள்வாங்கிக் கொண்டதும், அட்டையின் தகவல்களைப் படித்து, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கிய வலையமைப்பின் வழங்கியினைத் தொடர்பு கொண்டு உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் ஆகியவை சரிதானா என்று உறுதி செய்யும். பின்னர் நம் பணப்பறிமாற்றத்தினை உங்கள் வங்கிக்கணக்கின் பண இருப்பினை வைத்து உறுதி செய்து பணத்தினை வழங்கும். இந்த மொத்த நடவடிக்கைகளும் முடியும் வரை மட்டுமே உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் தற்காலிகமாக ATM கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும். அதன்பின் அவை அழிக்கப்பட்டு விடும். பணத்தாள்களை வெளியிடும் போது அவற்றின் தடிமனை வைத்தே கணக்கிடப்படும், தடிமன் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவை தனியே ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். பரமாரிப்பு மற்றும் பணத்தாள்களை வைப்பதற்காக வரும் அதிகாரிகள் அவ்வாறு ஒதுக்கப்பட்ட தாள்களை சேகரித்து மறுஆய்வுக்கு எடுத்துச் செல்வர்.



மின்னஞ்சல், கணினி மற்றும் இதர இணைய வசதிகளுக்கே கடவுச்சொலை அப்படி வை, இப்படி வை என்று ஏகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் கணினியுலகம், ஒருவரது வங்கிக்கணக்கினை கையாளும் ATM இயந்திரங்களுக்கு வெறும் நான்கு இலக்கங்கள் மட்டுமே வைத்திருப்பது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?. நான்கு இலக்கங்கள் பாதுகாப்பானைவையே அல்ல, மொத்தம் பத்தாயிரம் கடவுச்சொற்களே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களால் பாவிக்கப்படுகிறது. அதனால் தான் முதல் மூன்று முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால் உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்படுகிறது. அப்படியும் முதல் மூன்று முறைக்குள்ளேயே உங்கள் கடவுச்சொல் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒரு நாளைக்கு எடுக்கப்படும் பணத்திற்கென்று அளவுமுறை வைத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக பணம் கொஞ்சம், கொஞ்சமாக மட்டும் நிதானமாகக் களவாடப்படும். அதற்குள் விழிப்படைந்து வங்கியில் முறையிட்டு பணத்தைக் காப்பாற்றிக் கொள்வது நம் திறமை.


ஒவ்வொரு வங்கியும் அவர்களுக்கென்று ஒரு ஆரம்பக் கடவுச்சொல் வைத்திருப்பார்கள் (0000, 1234), முதல் முறை உங்களிடம் அட்டை வழங்கப்படும் போது அந்த கடவுச்சொல் தான் இருக்கும், பின்பு நாம் அதனை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி நாம் மாற்றும் எண்ணுக்கும், ஆரம்பக் கடவுச்சொல் எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் (offset value), உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ள வழங்கியில் சேமிக்கப்படும். ஒவ்வொரும் முறை நீங்கள் ATM உபயோகிக்கும் போதும் உங்கள் கடவுச்சொல் மற்றும் வங்கியின் ஆரம்பக் கடவுச்சொல் ஆகிய இரண்டும் இடையே உள்ள வித்தியாசம் தான் சரிபார்க்கப் படுகிறதே தவிர நேரடியாக உங்கள் கடவுச்சொல் சரிபார்க்கப்படுவதில்லை என்பது உபரித் தகவல். சர்வதேச தரக்கோட்ப்பாட்டின் படி 4 முதல் 12 இலக்கங்கள் வரை கடவுச்சொல்லாக பயன்படுத்தலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இருந்தாலும் இத்தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஷெப்பர்ட் பரன், தன் சோதனை முயற்சிகளின் போது தன் மனைவியின் உதவியினை நாடினார். ஷெப்பர்டின் மனைவியோ 'என்னால 4 தான் ஞாபகத்துல வச்சுக்க முடியும்' என்று வெட்டு ஒன்று துண்டு நான்காக சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி தலையாட்டிய ஷெப்பர்டின் சம்சார விசுவாசத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு இன்றும் நான்கு இலக்கங்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதிவிலக்காக ஸ்விஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஆறு இலக்கங்கள் கொண்ட கடவுச்சொற்கள் பயன்படுத்தப்படுவதாகக் கேள்வி. நீங்கள் அதுபோன்ற இடங்களில் இருந்து வாசிப்பவராக இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லிச் சென்றால் சிறப்பு, சொல்லாமல் சென்றால் அதனினும் சிறப்பு :). மேலும் திரைகடலோடும் காலங்களில் நாணய மாற்றுக்கு ATM பயன்படுத்துவது லாபகரமானதென்றாலும் அதற்கு வங்கி உங்கள் மீது வி(மி)திக்கும் சேவைக் கட்டணத்தைப் பொறுத்துப் பயன்படுத்திக் கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறது.


தொழில்நுட்ப விவரங்களையும் தாண்டி சில பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுவது சாலவும் நன்று. உங்கள் வங்கி அட்டையின் பின்பக்கத்திலேயே மிகத் தெளிவாக, அழகான கையெழுத்தில் கடவுச் சொல்லை எழுதி வைப்பது, ATM இயந்திரத்தின் அருகே சென்று நின்று கொண்டு, வில்லங்கமானவர்கள் தாக்குவதற்கு வசதியாக தலை முழுவதையும் உங்கள் பர்ஸுக்குள் நுழைத்து அட்டையைத் தேடி கொண்டிருப்பது, விளக்கு வெளிச்சம் அதிகமில்லாத ATM இயந்திரத்தைப் பயன்படுத்துவது போன்றவை 'தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட தானைத் தலைவன்' என்று எல்லாராலும் அன்போடு அழைக்கப்பட ஏதுவாயிருக்கச் செய்யும் செயல்கள். போலி அட்டைகள் உருவாக்குவதில் நாம் இளம் விஞ்ஞானிகள் நூறு ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிப்பதால், அடிக்கடி ATMல் புழங்கும் அன்பர்கள், குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை உங்கள் வங்கிக் கணக்கின் பணப்பறிமாற்றத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. மேலதிக பாதுகாப்பு அறிவுரைகள் ஏதுமிருந்தால் பகிர்ந்து கொள்ளும் வாசர்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள் அதிரடிப் பரிசாக வழங்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு இப்பதிவு நிறைவடைகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக