awisosplschool

awisosplschool

புதன், 20 ஏப்ரல், 2011

உலகத்தைதுகிலுரிக்கும்இணயம்:விக்கிலீக்ஸ்மர்மங்கள்-3

Tor - The Onion Routing project என்று ஒரு விஷயம் இருக்கிறது. அது பற்றி இப்பகுதியில் பார்ப்போம். முதலில் Torக்கும் விக்கிலீக்ஸ் தளத்திற்கும் என்ன தொடர்பு?, தங்கள் தளத்திற்கு ரகசியத் தகவல்களை அனுப்ப விரும்பும் அன்பர்கள் இணையத்தொடர்பில் தங்கள் அடையாளங்களை மறைத்து, தகவல்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க Mediawiki, Freenet மற்றும் PGP ஆகியவற்றினைப் பரிந்துரைத்தாலும், விக்கிலீக்ஸ் தளம் தனது பங்களிப்பாளர்களுச் செய்யும் சிறப்பு சிபாரிசு தான் இந்த Tor. சரி இவையெல்லாம் என்ன? உங்களை, உங்கள் இணையத் தொடர்பு குறித்தத் தகவல்களை இணையத்தில் மறைப்பதற்குப் பயன்படும் மென்பொருட்கள். இதைப் படிக்கும் உஷாரான அன்பர்கள் 'இத வச்சுத் தமிழ்மணத்தில் கள்ள ஓட்டுப் போடலாமண்ணே?' என்றெல்லாம் கேட்கக் கூடாது :D ;).


முதலில் இணையத் தொடர்பு மின்னஞ்சல், மின்னரட்டை, கோப்புப் பகிர்தல் இப்படி எதுவாக இருந்தாலும் உங்கள் இருப்பிடத் தகவல்கள் முதல் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள் வரை விருந்து வைக்கப்படுமென்பதை சுடுதண்ணியை ஆதி முதல் படித்து வரும் அன்பர்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும், தெரியாதவர்கள் இங்கே சென்று சற்று இளைப்பாறி விட்டுத் தொடரலாம். இணையத்தொடர்பில் நீங்கள் பயன்படுத்தும் வழங்கிகளில் உங்கள் தொடர்பின் சரித்திரமே சேகரிக்கப்படும். அதன் மூலம் தான் இணையக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சாத்தியமாகிறது. சமீபத்தில் தனது வழங்கியின் தகவல்களைப் பகிர மறுத்த ப்ளாக்பெர்ரி நிறுவனத்துக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் இது சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்தது நினைவிருக்கலாம். விக்கிலீக்ஸ் சந்திக்கும் மிகப் பெரிய சவாலே இந்த இணையத் தொடர்புச் சங்கிலியை எப்படியும் கண்டுபிடித்து விட முடியும் என்பது தான். இதன் காரணமாக ரகசியத் தகவல்கள் அடங்கியக் கோப்புகளைப் பகிர்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். மேலே சொல்லப்பட்டிருக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தினால் இதிலிருந்து தப்பிக்கலாம் என்பதை ஹேக்கிங்கில் கரை கண்ட ஜூலியனுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவற்றுள் ஜூலியனின் தேர்வு தான் Tor.

Tor - The Onion Route தன் பெயருக்கேற்றால் போல் வெங்காயம் தான். உரிக்க, உரிக்க இதழ்கள் தான் கிடைக்குமே ஒழிய, ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே இருக்காது. கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இந்த Tor. முதலில் Tor ஒரு திறந்த கட்டற்ற மூலப்பொருள் (open source) என்று சொன்னால் புரியாமல் போவதற்கு வாய்ப்பிருப்பதால், நமக்குப் புரியும் வண்ணம் 'இலவச மென்பொருள்' என்று இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது :).


Tor வலையமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு முதலில் அதன் மென்பொருளைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும் ( உரல்: http://www.torproject.org/download/download.html.en ). உங்களைப் போன்றே இணைய உலகில் அடையாளமின்றி உலவ விரும்பும் அன்பர்களும் தங்கள் கணினியில் நிறுவியிருப்பார்கள். உலகில் சிலர் நல்லவர்களாக இருப்பார்கள், இன்னும் சிலர் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ரொம்ப நல்லவர்கள் இந்த Tor மென்பொருளில் இருக்கும் 'Relay' என்றொரு வசதியை தேர்வு செய்திருப்பார்கள். இதன் மூலம் Tor வலையமைப்பில் அவர்களின் கணினியும் ஒரு தொடர்பு வழங்கியாக செயல்படும். Tor மென்பொருளை சரியான உள்ளீடுகளுடன் செயல்படுத்தினால் Tor-relay தொடர்பு புள்ளிகளின் வழியாக மட்டுமே உங்கள் இணையத் தொடர்புகள் நடைபெறும். ஒரு தொடர்புக்குக் குறைந்த பட்சம் மூன்று தொடர்பு வழங்கிகளை Tor பயன்படுத்தும். உங்கள் தொடர்பு வலையமைப்பினை நீங்கள் விரும்பும் நேரம் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைக்கப்படும் Tor வலையமைப்பில் ஒவ்வொரு தொடர்புப் புள்ளியிலும் உங்கள் தகவல்கள் ஒருமுறை சங்கேதக் குறியீடுகளாக மாற்றியமைக்கப்படும். இப்படி பல அடுக்கு குறியீட்டும் முறைகள் பயன்படுத்தப்படுவதால், என்ன தகவல் பயணிக்கிறதென்பது யாருக்குமே தெரியாது என்பதற்கு விக்கிலீக்ஸ் இதனைப் பயன்படுத்தச் சொல்வதே சான்று. அதிகபட்சம் இந்த வலைச்சங்கிலித் தொடர்பினை ஆய்வு செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் வலையமைப்பு எண் கிடைக்க வாய்ப்பிருக்கிறதே ஒழிய, குறிப்பிட்டத் தகவலை நீங்கள் தான் அனுப்பியதாக நிரூபிக்க வாய்ப்பே இல்லை. Tor குறித்த செயல்முறை விளக்கப் பதிவு நிச்சயம் விரைவில் வெளியிடப்படும். மேலும் Tor சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, அதனைப் பயன்படுத்துவதாலேயே அல்லது relay செய்யும் தொடர்புப் புள்ளியாக இருப்பதாலேயோ உங்கள் மீது யாரும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதும் ஒரு முக்கிய அம்சம்.

இப்படி மசாலாப் படத்தின் கதாநாயகனைப் போல் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்படும் Tor வலையமைப்பில் கொக்கி போடப்பட்டுத் தான் முதல் விக்கிலீக்ஸ் ரகசியத் தொகுப்பு வெளியிடப்பட்டது!!!. இருந்தும் விக்கிலீக்ஸ் ஏன் இன்னும் Tor வலையமைப்பினைப் பரிந்துரைக்கிறது?. அடுத்த பகுதியில்.

ஜூலியனின் அட்டகாசங்கள் தொடரும் :).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக