awisosplschool

awisosplschool

விக்கிலீக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விக்கிலீக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஏப்ரல், 2011

உலகத்தைதுகிலுரிக்கும்இணயம்:விக்கிலீக்ஸ்மர்மங்கள்-1

வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் சரக்கடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் 'விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து இத்தொடரில் விரிவாகப் பார்ப்போம்.


'விக்கி' என்பது வருவோர், போவோர் என் யார் வேண்டுமானாலும் பங்களிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இணையத்தளங்களைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தை. உதாரணத்திற்கு தகவல் களஞ்சியமான என்சைக்ளோபிடியாவின் விக்கி வடிவம் தான் விக்கிப்பிடியா. இதே நேர்கோட்டில் ரகசியத் தகவல்களை உலகத்தில் உள்ள எவரின் பங்களிப்பின் மூலமாகவும் வெளியிடும் இணையதளம் தான் விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தளத்தின் பங்களிப்பாளர்களின் விவரங்கள் யாருக்குமே தெரியாது, தாங்களாக முன்வந்து சொல்லும் வரை.


உலகப்பந்தில் யாருக்குமே தெரிந்திருக்காத, நம்ம வீடு இருக்கும் தெருவின் வட்டபிரதிநிதிகளை விமர்சித்தாலே, அவர்கள் 'ஆளடி' அருணாவாக உருமாறும் வாய்ப்பிருக்கும் இக்காலத்தில் சர்வ வல்லமையுடன், சகல அதிகாரமும் படைத்த பல நாட்டு அரசாங்கங்கள், வல்லரசுகள் போன்ற பயில்வான்களுடன் மோதும் விக்கிலீக்ஸ் எவ்வளவு மிரட்டல்களையும், சவால்களையும், நிர்ப்பந்தங்களையும் சந்திக்கும் என்பதை எவ்வளவு உயரத்தில் நின்று கற்பனை செய்து பார்த்தாலும் எட்டவே எட்டாது :). 'சர்வ அதிகாரமும் படைத்த' என்று சொல்லப்படும் இந்த அரசாங்கங்கள், தங்கள் விரலசைவில் பல்லாயிரம் உயிர்களைப் பறிக்கப் போகும் போர் உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு சரக்கடிக்கப் போய்விடும் ஏகாதிபத்திய தலைவர்கள், இவர்கள் எல்லாருமே விக்கிலீக்ஸ் விஷயத்தில் செமிக்காமல் செருமிக் கொண்டிருப்பது ஏன்?. உலக நாடுகளுக்கெல்லாம் 'அந்தாளு சொல்றத நம்பாதீங்க, அவன் பொய் சொல்றான்' என்று கோவை சரளா போல் கூவிக் கொண்டிருக்கிறாரே அமெரிக்கப் பேரரசாங்கக் காரியதரிசி ஹிலாரி கிளிண்டன், ஏன்?. 'தொழில்நுட்பம்'!!!.


'நாந்தான் அப்பவே சொன்னேன்ல' என்று கோடிட்டுக் காட்டும் கர்ணப் பரம்பரை வழக்கப்படி, வருங்காலத்தில் புரட்சி வித்துகள் இணையத்தின் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் கையிலுமே இருக்கிறதென்பதை முன்பே இப்பதிவில் சொல்லியிருப்பதை இக்கணத்தில் நினைவுபடுத்த சுடுதண்ணி கடமைப்பட்டிருக்கிறது :D. விக்கிலீக்ஸ் விஷயத்தில் தொழில்நுட்பம் தன் விஸ்வரூபமெடுத்து ஆடிக் கொண்டிருந்தாலும் அதில் ஒரு சட்ட ரீதியான சூட்சுமம் இருக்கிறது. ராஜாங்க ரகசியங்களை வெளியிட்டால் ஜனநாயாக நாடுகளில் கூட கடும் தண்டனைகள் உள்ள இக்காலத்தில் உலகிலேயே 'வெட்டிப் போடும்' தண்டனைகளுக்குப் புகழ்பெற்ற சவுதி அரேபியா போன்ற நாடுகளின் அரசாங்கப் பதிவுகளைக் கூட பந்தியில் வைத்துச் சந்தி சிரிக்க வைக்கும் விக்கிலீக்ஸ், சட்ட ரீதியான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறது?.


விக்கிலீக்ஸ் தனது இணைய வழங்கிகளை (webservers), ஊடகத் தகவல்களின் ஆதாரங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்ப முடியாத சட்டதிட்டங்கள் கொண்ட நாடான ஸ்வீடனில் வைத்திருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க வழங்கிகளின் மூலம் செயல்பட்டு வரும் டொரண்ட் தளங்களின் உரிமையாளர்கள் மேல் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருட்டு விசிடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காத்திருக்கும் நிலைக்கு ஒப்பானது. விக்கிலீக்ஸ் நபர்கள் வில்லங்கமான நாடுகளுக்குப் போனால் கைகளுக்குக் காப்பும், மாமியார் வீட்டு விருந்தும் நிச்சயம்.


விக்கிலீக்ஸ் தளத்திற்கு தகவல்கள் அளித்த ஒரு அமெரிக்க இராணுவ வீரருக்கே வாழ்க்கை முழுவதும் சிறைதண்டனைக்கு வாய்ப்பிருக்கும் வேளையில், விக்கிலீக்ஸ் நப்ர்கள் சிக்கினால் சிறைக்கும், நீதிமன்றத்துக்கும் மாறி மாறி அலைக்கழித்தே உயிரெடுத்துவிடுவார்கள். இத்தகைய அபாயத்தில் இருக்கும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் உரிமையாளர் யார்?, அந்த இணையத் தளம் யார் பெயரில் பதிப்பிக்கப் பட்டு இருக்கிறது?. தங்களுக்குத் தகவல்களை அனுப்பி வைக்கும் நபர்களின் பாதுகாப்புக்கு விக்கிலீக்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன? , அதை நாம் எப்படி உபயோகப் படுத்துவது ;), போன்ற கேள்விகள் குறித்து இனிவரும் பகுதிகளில் காண்போம்...

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

விக்கிலீக்ஸ்-திஹிந்துபெருமையுடன்இணைந்துவழங்கும்.......

கடந்த செவ்வாய்க் கிழமையன்று லண்டன் காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களிடம் உலக அரசியல் மாற்றங்களும், இணையத்தின் தாக்கமும் என்ற தலைப்பில் ஜூலியன் அரட்டை அரங்கம் நடத்திக் கொண்டிருந்த அதே வேளையில், தி ஹிந்து நாளிதழ் விக்கிலீக்ஸ் நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 'cable leaks' வெளியீடுகளில் இந்தியா குறித்தானத் தொகுப்புகளை வெளியிடுவதாக அறிவித்து, அதனைத் தினந்தோறும் வெளியிட்டும் வருகிறது. அது பற்றிய ஒரு அலசல் இப்பதிவு.

இணையத்தின் மூலம் உலக அரங்கில் அரசியல் மாற்றங்கள் வரப்போவதை சென்ற வருடமே லாட்வியாவில் நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி சுடுதண்ணியில் ஆருடம் கூறியிருந்தாலும் சமீபத்தில் வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் தொடர் நிகழ்வுகள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொல்லும் செய்தி என்ன?. இணைய வழியில் அரசியல் அதிகார மையங்களுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன? இந்தியா குறித்தான தனது பார்வை குறித்து பிணையில் வெளிவந்த பிறகு முதன்முறையாக பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜூலியன் பேசியிருக்கும் அதே நேரத்தில், தி-ஹிந்து நாளிதழ் விக்கிலீக்ஸ் ஆவணங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் விவரங்கள் என்ன?.  இக்கேள்விகளை அனைத்தும் உங்களைத் துளைத்தெடுத்தால் மட்டுமே மேற்கொண்டு படிக்கவும். (ஏன்னா.. பதிவு கொஞ்சம் நீளம் அதிகம் :D).


முதலில் ஜூலியன் பேசியது குறித்து. "இன்றைய உலகில் எளிதாகவும், மிக அதிகமாகவும் வேவுபார்க்க பயன்படுத்தப்படும் ஊடகம் இணையம். இணையத்தில் அதிகார மையங்களை எதிர்த்து புரட்சி கும்மியடிக்கும் தம்பிகள் போதிய தொழில்நுட்ப புரிதலின்றி வரம்பு மீறி செயல்பட வேண்டாம். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் கண் சிமிட்டும் நேரத்தில் யாராலும் வேவு பார்க்கப் படலாம். செய்தி ஊடகங்கள் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகத்தான் அரசியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்ற மாயை உருவாக்குகின்றன. அதை நம்பி மோசம் போக வேண்டாம்.  குறிப்பாக எகிப்தின் முபாரக் அரசாங்கத்தினால் இணையத்தில் செயலாற்றியவர்களைக் களையெடுத்து கிட்டத்தட்ட பதவி விலகுவதற்குள் ஒரு குறுவை சாகுபடியே நடத்தி முடிக்கப்பட்டது குறித்து அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இணையத்தின் தாக்கம் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற அரசியல் போராட்டங்களில் ஓரளவுக்கு இருந்தாலும்,அவற்றின் வெற்றிக்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் அதனாலான சர்வதேச அழுத்தம். ஆட்சி மாற்றங்களுக்கான போராட்டங்கள் நடக்கும், நடந்து கொண்டிருக்கும் அனைத்து நாடுகளிலும் அமெரிக்காவின் ஊடகங்களும், அரசின் அதிகார மையங்களும் புரட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டையே கொண்டிருப்பதை கவனியுங்கள். மேற்கூறிய நாடுகள் சம்பந்தமாக சென்ற வருடம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக ஆவணங்கள் (cable leaks) சொல்வதெல்லாம் அமெரிக்கா ஆட்சி மாற்றத்தினை விரும்புகிறது என்பதைத் தான். அதன் பிறகு தான் புரட்சியாளர்களுக்கு தாங்கள் போராடினால் அமெரிக்கா கைகொடுக்கும் என்ற நம்பிக்கைப் பிறந்தது. மற்றபடி இணையம் ரொம்ப ஆபத்தானது அதில் செயல்படும் போது கவனம், கவனம், கவனம்'. இதுதான் ஜூலியன் ஆற்றிய உரையின் சாராம்சம்.

அதெல்லாம் சரி இந்தியா பற்றி என்ன சொன்னார் ஜூலியன்?. ஆறு மில்லியன் வார்த்தைகளைக் கொண்ட மொத்த விக்கிலீக்ஸ் ஆவணங்களும் இந்தியப் பாராளுமன்றத்தினை அதிர வைக்கப்போகிறது என்று சொல்லியிருக்கிறார். நம்மவர்களைப் பற்றி ஜுலியனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லையென்றாலும், தன் எதிர்பார்ப்பை தெரிவித்திருக்கிறார். விக்கிலீக்ஸ் தங்கள் ஆவணங்களை வெளியிட பயன்படுத்திக் கொண்ட மேற்கத்திய அச்சு ஊடகங்களான அமெரிக்காவின் நியூயார்க்கர், இங்கிலாந்தின் கார்டியன், ஜெர்மனியின் தி மிரர் (Der Spiegel) ஆகியவற்றின் வரிசையில் இந்தியாவின் 'தி-ஹிந்து'. அந்த வகையில் ஹிந்து பத்திரிக்கைக்கு இது ஒரு மைல்கல். ஊடக உலகிற்கு புதியபாதை வகுத்த ஜூலியனுடன் கைகோர்ப்பதென்பது பெருமையான விஷயம். ஆனால் இது 'ரொம்ப தாமதம்'. 

தலைப்புச் செய்தியில் இன்று நம் பிரச்சினைகளுக்கான கடிதம், தந்தி, புறாக்கள் குறித்தான விவரங்களை அறிந்து புளகாங்கிதமடைந்து, சினிமாச்செய்திகளுக்குள் புகுந்து, ராசிபலன் படித்து வெளிக்கிளம்பும் சாமனிய இந்தியனுக்கு ஏதோ இன்று தான் விக்கிலீக்ஸ் இந்தியா குறித்த ஆவணங்கள் வெளியிடுவதாகத் தோன்றலாம்.  விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒட்டு மொத்த அமெரிக்க தூதரக ஆவணங்களனைத்தும் இணையமெங்கும் அள்ளி வீசப்பட்டு பல மாதங்களாகி விட்டன. மற்ற நாட்டு ஆவணங்கள் எல்லாம் அந்நாட்டு மக்களால் அலசி, ஆராய்ந்து அக்குச்சிக்காகி, செத்துச் சுண்ணாம்பாகிப் போன வேளையில் தான் 'இந்திய ஆவணங்கள்' புத்தம்புதுசாக வெளியாகிறது. இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் செய்தி, நம்மில் நிறையபேருக்கு விக்கிலீக்ஸ் குறித்துத் தெரிந்திருக்கவில்லை, முக்கியமாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், எதிர்க்கட்சிகள், ஊடக அன்பர்கள் இவர்களுக்கெல்லாம் விக்கிலீக்ஸ் ஆவணங்களை எப்படி அணுகுவதென்பது கூடத் தெரியாத நிலை.  நரம்பு தளர்ந்து போன அறுபது ஆண்டு ஜனநாயகத்தை, ரத்தம் சுண்டிப்போன அரசியல்வாதிகள் நிர்வாகம் செய்தால் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே அட்சரம் பிசகாமல் இருக்கிறது பாரதம். தகவல் தொழில்நுட்பத்தின் 'பாட்ஷா' வாக இருக்கும் இந்தியா இப்போது தான் மின்னஞ்சல் முகவரி பெற்றுக் கொள்ளும் 'நாய் சேகர்களால்' ஆட்சி செய்யப்படுவது காலத்தின் கோலம். இவர்களுக்கு விக்கிலீக்ஸ் காத தூரம். 


இதுவெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்பொழுது தான் அச்சு ஊடகமொன்று இந்தியாவில் வெளியிடுகிறதே,   விக்கிலீக்ஸ் மற்ற நாடுகளில் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தினை இங்கும் ஏற்படுத்துமா? வாய்ப்பே இல்லை. ஏன்?. விக்கிலீக்ஸின் இந்திய ஆவணங்கள் சொல்லப் போவதெல்லாம் என்ன?. இந்தியா அரசாங்கத்தின் போலி மதச்சார்பின்மை, முட்டாள் தனமான பிராந்திய வெளியுறவுக்கொள்கைளின் காரணமாக சகட்டுமேனிக்கு அனைவரிடமும் திரைமறைவில் மண்டியிட்டுவிட்டு, ஊடகங்களில் பசப்புதல், 'இங்கு தரமான வாக்குகள் மொத்த விலையில் விற்கப்படும்' என்றாகிவிட்ட போலி ஜனநாயகம் ஆகியவை தான். இதில் ஏதாவது படிக்கும் அன்பர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா?. இருக்காது, நாம் எவ்வளவெல்லாம் பார்த்திருக்கிறோம் என்பது ஜூலியனுக்குத் தெரியாது, ஆனால் நிச்சயம் ஹிந்து பத்திரிக்கைக்குத் தெரியும். மும்பைத் தாக்குதலை வைத்து இந்திய அரசாங்கம் மதரீதியான அரசியல் நடத்தியது முதல், ஈழப்பிரச்சினையில் மேற்கத்திய நாடுகளை தலையிடாமல் இருக்கக் கெஞ்சியது மற்றும் மதுரை சிம்மக்கல்லில் பட்டுராஜன் (முன்னாள் மதுரை மேயர்) வாக்காளர்களுக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது வரை விவரிக்கிறது விக்கிலீக்ஸ். குற்றம் கூறப்படும் அனைவருமே 'இது எங்கள் மீது சுமத்தப்படும் வீண்பழி, இதை வன்மையாக மறுக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, அமெரிக்காவுக்கே அல்வா கொடுத்த காண்டாமிருகம் வாழ்க என்று ப்ளெக்ஸ் வைத்துக் கொண்டாடிவிட்டுப் போவார்கள்.  ஒரு வேளை 'நமீதாவுடன் மாலத்தீவில் கரையொதுங்கிய இளம் அரசியல்வாதி' போன்ற பிட்டுக்கள் ஏதெனும் ஆவணத்தில் இருந்தால், காணொளி கிடைக்கிறதா என தேடித்தேடி ஒட்டு மொத்த இணையமும் சின்னாபின்னப் படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது :D.

ஒட்டுமொத்த கேபிள்களுமே 30 மில்லியன் வார்த்தைகள், அவற்றில் 6 மில்லியன் வார்த்தைகள் அதாவது ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவின் ஆவணங்கள். இது அமெரிக்கா, இந்தியா மீது செலுத்தும் விசேஷ கவனத்தினையும், இந்திய அதிகார மையங்களின் தூண்கள் அனைத்தும் தூதரக விருந்துகளில் வரிசையில் நின்று மதுவருந்தி விட்டு, (அ)முக்கிய விஷயங்களனைத்தையும் வாந்தியெடுத்து வைத்து விட்டு வருவதையும் சொல்லாமல் சொல்லிச் செல்கிற மறைபொருட்கள். ஹிந்துவின் இந்த அணுகுமுறையால் ஜூலியனின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பும் பட்சத்தில், கணிணிமயப்படுத்தப்பட்ட இந்திய அரசுத்துறை வழங்கிகளின் பாதுகாப்பின் தரம் விரைவில் பல்லிளிக்கலாம் :D.

மற்ற இந்திய ஊடகங்கள் ஏதும் வெளியிட எந்தவித முயற்சியும் செய்யாத நேரத்தில், சட்டரீதியான பாதுகாப்புடன் விக்கிலீக்ஸ் உடன் முறையான ஒப்பந்தம் செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழின் முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. எவற்றையும் 'உள்'ளரசியல் காரணமாக தணிக்கை செய்யாமல்  கிடைக்கப்பெற்ற அனைத்து ஆவணங்களையும் மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டியது ஹிந்துவின் தார்மீகக் கடமை, ஏனெனில் ஜூலியனுக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'தணிக்கை'.

இப்பதிவினை எழுதத் தூண்டிய திரு.சித்திரகுப்தன் அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

நன்றி